குழந்தை பாக்கியம் அருளும் புத்ர(ஜா)தா ஏகாதசி

ஏகாதசியின் மகிமை எல்லா யுகங்களிலும் வெளிப்பட்டு இருக்கிறது. ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி புத்ர(ஜா)தா ஏகாதசி எனப்படும்.

என்ன கோளாறாக இருந்தாலும் சரி.. அந்தக் கோளாறை நீக்கிப் புத்திர பாக்கியத்தை அளிக்கக் கூடியது இந்த ஏகாதசி. இதன் மகிமையை விளக்கும் வரலாறு:

துவாபர யுகத்தில் மாகிஷ்மதி நாட்டை ஆண்டு வந்த மன்னர் மகீஜித், குழ்ந்தை இல்லாமல் வாடினார். வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோர்களை அழைத்துத் தன் குறையைச் சொல்லி காரணத்தை கேட்டார். அவர்கள், “மன்னா, அதற்கான வழியை நாங்கள் தெரிந்து வருகிறோம்” என்று சொல்லி காட்டுக்குச் சென்றார்கள்.

அங்கு லோமசர் என்ற முனிவரிடம், “முனிவரே, எங்கள் மன்னருக்கு மகவு ஒன்று பிறக்க வழி செய்ய வேண்டும்” என்று வேண்டினார்கள். ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்த லோமசர், “அன்பர்களே, உங்கள் மன்னர் போன பிறவியில் ஒரு வியாபாரியாக இருந்ததால், வியாபர விஷயமாக வெளியூர் போகும்போது நடுவழியில் தாகம் தாங்காமல் ஒரு குளத்துக்குத் தண்ணீர் குடிக்கப் போனான். அங்கு ஒரு பசு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது.

இந்த பசு தண்ணீரை கலக்கிவிடும் என்று எண்ணிய வியாபாரி, அதை விரட்டி விட்டுத் தான் மட்டும் தண்ணீரைக் குடித்தான். அந்தப் பாவத்தின் காரணமாக உங்கள் மன்னனுக்குக் குழ்ந்தை இல்லை.

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உங்கள் மன்னனை விரதம் இருந்து விஷ்ணு பூஜை செய்யச் சொல்லுங்கள். புத்ரஜாத என்னும் அந்த ஏகாதசி புத்திரனை அளிக்கும்” என்று சொல்லி வழி காட்டினார்.

அவர் சொல்படியே மன்னன் மகீஜித் முறைப்படி விரதம் இருந்தார் அவருக்கு புத்திரனும் பிறந்தான். பிள்ளை பிறக்காது என மருத்துவர்களாலேயே சொல்லப்பட்டவர்களுக்குக்கூட நல்ல புத்திர பாக்கியத்தை அளிக்கக் கூடியது இந்த புத்ரஜாதா ஏகாதசி விரதம்.