செந்தூரம் பூசும் விநாயகர்!

ஆஞ்ச நேயருக்குத்தான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் திருவண்ணாமலை கோவிலில் விநாயகருக்கு செந்தூரம் பூசி வழிபடுகிறார்கள். இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது.

திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அவனிடம் பணியாள் போல கட்டுப்பட்டுக் கிடந்தாள். இதனால் அவன் செருக்குடன், யாரையும் மதிக்காமல் இருந்தான்.

அருணகிரிநாதர் சுவாமிகள் மக்கள் மத்தியில் புகழ் பெற்று வந்ததால் அவர் மீது அவனுக்கு கடும் ஆத்திரமும் பொறாமையும் ஏற்பட்டது. ராஜாவிடம் சென்று அருணகிரி பற்றி புகார் கூறினான்.

அருணகிரி ஏமாற்று பேர் வழி. அவரால் முருகனை வரவழைக்க முடியுமா? என்னால் காளியை வரவழைக்க முடியும்’’ என்று சவால் விட்டான். அருணகிரியும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.

மறுநாள் சபை கூடியது. அருணகிரிநாதர் பதிகங்கள் பாடினார். ஆனால் முருகன் காட்சிக் கொடுக்கவில்லை. ஏன் என்று அவர் யோசித்த போது காளி தன் மகன் முருகனைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதை ஞானத்திருஷ்டியால் அறிந்தார். உடனே அருணகிரிநாதர், காளி மீது 4 பதிகங்களைப் பாடினார். அதில் காளி மயங்கினாள். அவள் பிடி தளர்ந்தது. அவளிடம் இருந்து விடுபட்ட முருகப்பெருமான் கம்பத்தை உடைத்துக் கொண்டு வந்து காட்சி கொடுத்தார்.

அதன்பிறகும் சம்மந் தாண்டான் அட்டூழியம் குறைய வில்லை. இதையடுத்து விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந் தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். இதை பக்தர்களுக்கு உணர்த்தவே திருவண்ணாமலை தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசப்படுகிறது.

சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும்.

தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.