தலைமைச் செயலகம் சென்று முதல்வராக பொறுபேற்ற எடப்பாடி பழனிச்சாமி மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பழனிச்சாமி, இன்று 12.30 மணியளவில் தலைமை செயலகம் வந்தார். பின்னர், முறைப்பாடி முதல்வர் பொறுப்பை அவர் ஏற்றார். முன்னதாக ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஜெயலலிதா அமர்ந்த அறைக்குச் சென்று அவர் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஐந்தினை நிறைவேற்றி கையெழுத்திட்டுள்ளேன். அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் மூலம் 1 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உதவி தொகை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறட்சி நிலவி வருவதால் குறுகிய காலகட்டத்திலேயே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.