தமிழகம் முழுவதும் நீதி கேட்டு பேரணி மேற்கொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் ஓ.பி.எஸ். உடன் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபாவும் பங்கேற்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கடந்த செவ்வாய்கிழமை இரவு சென்று மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்று கூறினார்.
ஓபிஎஸ்க்கு ஆதரவு
சசிகலாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இளைஞர்கள், பொதுமக்கள், அதிமுக தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது.
எடப்பாடிக்கு எதிர்ப்பு
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தொகுதிக்கே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதையடுத்து கட்சியும் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதால் மக்களிடம் நியாயம் கேட்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்தார்.
ஜெயலலிதா பிறந்தநாளில் பயணம்
இந்நிலையில் இன்று ஓபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவே தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து சுற்றுபயணம் மேற்கொள்வதாகும். பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் முதல் தனது பிரசார பயணத்தை துவக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பயணம்
தமிழகம் முழுக்க ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு காவல்துறை மூலமும், தனிப்பட்ட முறையிலும் நெருக்கடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நீதிகேட்டு தமிழகம் முழுவதும் பயணம் செய்ய திட்டுமிட்டுள்ளார்.
ஓபிஎஸ் உடன் ஜெ.தீபா
தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தீபாவும் ஓபிஎஸ்சும் நீதிகேட்டு பிரசார பயணம் செல்ல உள்ளனர். முதல்கட்டமாக 122 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளார். ஓபிஎஸ் உடன் ஜெ. தீபாவும் செல்வதால் இந்த பேரணி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் என்பது நிச்சயம்.