சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா தமிழக முதல்வராவதற்காக சட்டசபைக் குழுத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்.
இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகளை மீறி முதல்வராக பதவியேற்க சசிகலா ஆயத்தமானபோது சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச் செல்வதற்கு முன்னதாக தனது ஆதரவாளரும், அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபை குழுத் தலைவராக சசிகலா உத்தரவின்பேரில் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் முதல்வராக முறைப்படி திங்கள்கிழமை எடப்பாடி பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை நேரில் சந்திக்கவுள்ளதாக தெரிகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. முதல்வராக பதவியேற்றவுடன் மக்கள் நலப் பணிகளில் ஈடுபடாமல் சிறையில் உள்ள குற்றவாளியை ஒரு முதல்வர் சந்திப்பதா? என்று பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.