பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது ‘சிரிக்க விடலாமா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை காவியன் என்பவர் இயக்கியுள்ளார். நிதின் சத்யா, மகாநதி சங்கர், சந்தான பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, இன்று முதலமைச்சராவதற்கு எவ்வளவு கஷ்டம், எவ்வளவு அடிதடி, எவ்வளவு சண்டையெல்லாம் நடக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும்போது நானும் ஒரு படத்தில் முதலமைச்சராக நடித்திருக்கிறேன். பாக்யராஜ் சாருடன் அந்த படத்தில் நான் நடித்தேன். எல்லோருக்கும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் அந்த படத்தின்மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். இப்படித்தான், நிஜத்தில் சாதிக்க முடியாததை நாங்கள் சினிமாவில் சாதித்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் என்னுடைய ரசிகர் என்று சொல்லிக்கொண்டார். எல்லோரும் முதலமைச்சர் ஆவதாக சொல்லிக் கொள்கிறார்கள். நீங்களும் முதலமைச்சராக ஆகவேண்டியதுதானே என்று கேட்டார். என்னை ஒரு கட்சி ஆரம்பிக்குமாறும் அவர் கேட்டார். கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றால் பணம் அதிகமாக தேவைப்படுமே என்று சொன்னேன். அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது, என்னுடைய குடும்பத்தில் ஒரு சகோதரியை இழந்தது போன்று நினைக்கிறேன். அவர் என்றைக்கு பீச்சில் படுத்தாரோ, அன்று முதல் இப்பொழுது வரைக்கும் அந்த பீச்சில் ஒரே கலவரமும், சண்டை, சச்சரவு என இருந்துகொண்டே இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.