எளிய முறையில் தியான பயிற்சி செய்யும் முறை!

* உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

* தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.

* வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது அமைதியான இடமாக இருக்க வேண்டும்.

* அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

* சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.

* இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பதை எண்ணவும்.

* இப்போது உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.

* ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.

* பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் “ராம, ராம” என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 இன் மடங்காக இருக்க வேண்டும்.

* தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள்.

இராஜயோக தியானம் :

ஒளிப்புள்ளியாக விளங்கும் மனதை இறைவனிடம் ஒரு நிலைப்படுத்தி அமைதி சக்தியை அனுபவம்செய்வது! பேரானந்தத்தில் மூழ்கியிருப்பது! தன்னை ஆன்மீகம், மனம் மற்றும் உணர்வு ரீதியில் சக்திசாலியாக ஆக்கிக் கொள்வது தன்னுள் அடங்கிக் கிடக்கும் கலைகளை, திறன்களை வெளியில் கொண்டு வருவது உயர்ந்த சிந்தனைகளையே சிந்தித்து, பண்பாளராய் விளங்குவது!

தியானத்தின் பலன்கள் :

கவலை, பயம், கோபம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மனம் மற்றும் உடல் ஆரோக்கியமடைந்து நலமும், வளமும் பெருகுகிறது.

எதிர்மறை உணர்வுகள் மறந்து, ஆக்கப்பூர்வ சிந்தனை மற்றும் எளிமையான சுபாவம் பரிமளிக்கிறது. போட்டி நிறைந்த இவ்வுலகில் தன்னம்பிக்கை வளர்ந்து சிந்தனை, சொல், செயல் வளம் அதிகரிக்கிறது.

அமைதியும் ஆனந்தமும் கிடைத்து, அலுவல் மற்றும் தொழில் செயல் திறன் கூடுகிறது.