காணாமற்போனோர் தொடர்பான பணியகம், அமைக்கப்படுவது சிறிலங்கா படையினரை அனைவரையும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அல்ல என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“காணாமற்போனோருக்கான பணியகம், தொடர்பாக சில இராணுவ அதிகாரிகள் தவறான கருத்தை பரப்புகிறார்கள்.
இந்த செயலகம் அனைத்து இராணுவத்தினரையும் அனைத்துலக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப் போவதாக எதிர்மறையான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
இவர்கள் கூறுவது தவறானது என்றும் , தவறு செய்த இராணுவத்தினரை மாத்திரமே, இந்த செயலகம் நீதிமன்றத்தில் நிறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே காணாமற்போனோருக்கான செயலகம் அமைக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் இந்த செயலகம் செயற்படத் தொடங்கும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி இன்னமும் இந்த செயலகம் யாருடைய தலைமையில் இயங்கும் என்று“அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.