இலங்கை துறைமுக அபிவிருத்திக்காக முதலீடுகளை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் தயாரென இலங்கைக்கான நோர்வே தூதுவர் தொரப்ஜோர்ன் குஹஸ்டட்ஸய்தர் தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடக பிரிவுடனான விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
நோர்வே மிகச் சிறிய நாடாகும். இந்நாட்டு துறைமுக கட்டமைப்பின் பொருட்டு இந்தியா சீனா போன்று மிகப்பெரிய முதலீடுகளை எம்மால் மேற்கொள்வது கடினம்.
எம்மிடம் துறைமுகம் பற்றிய அறிவு மற்றும் அனுபவம் அதிகமாகும். உயர் தொழில்நுட்பங்கள், விசேடமாக துறைமுகம் தொடர்பாக பல பாடநெறிகள் எம்மிடம் உள்ளன.
தொழில்நுட்பம் அணுசக்தி கொள்கலன்கள் போக்குவரத்து முனையங்களிலுள்ள தொழிற்பாடுகள் மற்றும் சேவை வழங்கல் இதற்கான சிறந்த உதாரணமாக கொள்ளலாம்.
இலங்கைக்கு தேவையென்றால் குறித்த சில துறைகளில் மாத்திரம் எம்மால் முதலீடுகளை மேற்கொள்ள இயலும் என்று இலங்கைக்கான நோர்வே தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக சூழல் மாசடைதலை தடுக்கும் பொருட்டு எம்மிடம் உயர் தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றது.
மின்சார உற்பத்தியின் பொருட்டு இயற்கை வாயு குழாய்களை முனையங்களிற்கு அருகாமையில் அமைப்பதற்கான அனுபவம் எம்மிடமுள்ளது.
எனவே எம்மால் இவ்வாறான துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள இயலுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவித்தார்.
இலங்கையானது பூகோள ரீதியாக முக்கிய இடத்தில் அமையப்பெற்றுள்ள நாடாகும். இதன் காரணமாக கப்பற்றுறை கேந்திர நிலையமாக இலங்கை அபிவிருத்தியடைவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.
உலக சந்தையின் போட்டி தன்மையினை எதிர்க்கொள்வதற்கான சக்தி இலங்கைக்குள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை துறைமுகத்தை போன்று துறைமுக வசதிகளையும் இலங்கை மேம்படுத்த வேண்டுமென நோர்வே நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளார்.