தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 2008ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அவசியம் என்பதை வலியுறுத்தியிருந்தோம்.
அவ்வாறு இல்லாது போனால் எமது ஆயுதப்போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்திருந்தோம். எனினும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அதற்கு இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு படுவதற்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைககலநாதனே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முப்படைகளையும் கொண்டிருந்த தமிழர்களால் எதனையும் சாதிக்க முடியவில்லை. அவ்வாறான நிலையில், உடனடியாக எதனையும் சாதிக்க முடியாது என செல்வம் அடைககலநாதன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய போதே செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.