தமிழ் மக்களை அதிகமாக விடுதலைப் புலிகள் தான் கொன்றனர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் 1983 ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 802 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஆயிரத்து 25 தமிழர்களும், 589 சிங்களவர்களும், 188 முஸ்லிம்களும் அடங்குவதாகவும், அவர்களுள் 522 பேர் அரச அலுவலர்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பத்ம உதயசாந்த குணசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளபோதே அமைச்சர் மேற்கண்டவ தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி., ரெலோ மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய

அரசியல் கட்சிளைச் சேர்ந்த தலா இருவரும் அதேபோல், ஈ.பி.ஆர்.எல்.எப். ஐச் சேர்ந்த 6 பேரும் அடங்குவதாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தப் படுகொலைகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க முடியும் எனவும் அமைச்சர் சாகல கூறியுள்ளார்.

எனினும், இவை இடம்பெற்று தற்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டதால், அவை தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு போதிய கால அவகாசம் தேவை என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.