சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்: ஸ்டாலின் ஆவேசம்!

உச்சநீதிமன்றத்தால் தண்டனை பெற்ற சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி எறிய சபதம் ஏற்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உச்சநீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்தது வெட்கக் கேடானது. ஜெயலலிதா சிறையில் இருந்த போது அவரது வழிகாட்டுதலில் ஓ. பன்னீர்செல்வம் ஆட்சி நடத்தினார்.

தற்போது சிறையில் இருக்கும் சசிகலாவின் வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்துகிறார். ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரண்டு பேரின் ஆட்சியும் பினாமி ஆட்சி தான். ஆட்சி என்ற பெயரில் அதிமுக கட்சி நடத்தி வருகிறது. சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி எறிய சபதம் ஏற்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.