கோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, ‘ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்படும் ‘டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது.
கிளிப் போடும்போது பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்படும். இதற்கு உள்ளே உணவுத் துணுக்குகள் புகுந்து பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் வளர ஆரம்பிக்கும். இந்தத் துணுக்குகளை அகற்றாதபோது, பல்லின் எனாமல் பாதிக்கப்படலாம். ஈறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், சொத்தை விழுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். பல் உள்ளே தள்ளப்படுவதால், பல் வேரில் பிரச்சனை வரலாம். கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம்.
கிளிப் அணிந்தவர்களுக்கான டிப்ஸ் :
* ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம்.
* ஒரு நாளைக்கு, குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
* ஒவ்வொரு முறை உணவு உண்டதும், பல் துலக்குவது நல்லது. முடியாதபட்சத்தில், தண்ணீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.
* பல் துலக்கியதும் ‘கிளிப்’ சுத்தமாக இருக்கிறதா என்பதை, கண்ணாடியில் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே ‘ஃப்ளாஸ்’ என்ற மெல்லிய மெழுகு நூலைப் பயன்படுத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.
* சுவிங்கம், வாயில் ஒட்டிக்கொள்ளக்கூடிய சாக்லெட், மிட்டாய், பாப்கார்ன் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பல், ஈறு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.