மகா சிவராத்திரி விரத முறை

மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அர்த்த ராத்திரியே மகா சிவராத்திரி. அன்று இரவு பதினான்கு நாழிகையின்போது முறைப்படி விரதமிருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.

சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க விருப்பதாகம் தன்னுடைய விரதம் எவ்விதப் பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.

நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிவராத்திரியின் முதல்நாள் பிரதோஷ தினம் ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும். சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.

நான்கு காலங்களிலும் கருவறையிலுள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும். மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்பவரை முறைப்படி வழிபட வேண்டும். அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்கபுராண திருக்குறுந்தொகையையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று பரஇதிகாசம் உரைக்கிறது. சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.