பெண்களை பாதுகாப்பதற்கு அவசர அறிவிப்பு விடுத்த அரசாங்கம்!

பரந்தளவில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது நடவடிக்கைகளை எடுப்பதற்காக அரசாங்கத்தினால் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய தேசிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழர் பகுதிகளில், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், இராணுவத்தினராலும், அரச அதிகாரிகளாலும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக, எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, அரசாங்கம் இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகத்தின் தலைவரான சந்திரிகா குமாரதுங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

எனினும், இராணுவம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் அரசாங்கத்துக்கு நெருக்கடியாக அமையலாம் என்பதைக் கருத்தில் கொண்டே, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான தேசிய ஆணைக்குழுவை அமைக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது,

பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு, வழங்கப்படும் என்றும் அரசாங்க அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.