சுமந்திரனை துரோகியாக காட்ட சிலர் முயற்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டு வந்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

சுமந்திரனை துரோகி என்று விமர்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளைச் சாடும் வகையில் உரையாற்றிய சம்பந்தன்,

“15 ஆயிரம் வாக்குகளை மாத்திரம் பெற்ற ஒரு கட்சி சுமந்திரனைத் துரோகியாக காட்ட முயற்சிக்கின்றனர்.

அந்தக் கட்சியினர் பெற்ற மொத்த வாக்குகளை விட நான்கு மடங்கு அதிகம் விருப்பு வாக்குகளைப் பெற்ற சுமந்திரனை அவர்கள் துரோகி என்கின்றனர்.

எமது மக்களுக்கும் நாட்டுக்கும் பெறுமதியான சேவைகளை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினராகவே நாம் சுமந்திரனைப் பார்க்கிறோம்.

அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.