விடுதலை புலிகளை தோல்வியடைய செய்த யுத்த வெற்றியின் கௌரவம், முன்னாள் ஜனாதிபதிக்கே கிடைக்க வேண்டும் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மூன்று தசாப்தங்களாக நிலவிய போரை வெற்றி கொண்ட பெருமை மஹிந்த ராஜபக்ஷவை சாரும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் வீரன் தான் என தன்னை தானே கூறும் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகாவின் கருத்திற்கு பதிலளித்த கருணா, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு பல வருடங்களுக்கு முன்னர் பொன்சேகா இராணுவத்தில் கடமையாற்றினார்.
அந்த காலத்திலேயே புலிகளை அழிப்பதற்கு பொன்சேகாவுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போதைய காலப்பகுதியில் தான் புலிகள் அமைப்பில் செயற்பட்டதாக கூறிய கருணா, அந்த காலப்பகுதியினுள் பொன்சேகாவினால் புலிகளை அழிக்கும் அளவிற்கு எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.
பொதுவாக யுத்த வெற்றிகள் இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே வழமையான போக்கு என்ற போதிலும், மஹிந்த ராஜபக்சவுக்கு காணப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களைக் கருத்திற் கொள்ளாமல், யுத்தத்திற்கு தலைமை தாங்கியதே அவரது சிறப்பு என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காரணங்களே, யுத்தத்த வெற்றியின் நாயகனாக மகிந்தவை முன்னிறித்தியது எனவும் கருணா தனது தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்தார்.