முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடிப்பதை நிறுத்தவில்லை எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை பொலிஸார் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 5 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஐந்து பேர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில் முதல் சாட்சியான ராசதுறை சுரேஷ் என்பவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டதாவது, மாவீரர் தினம் அனுஸ்டித்தமைக்காக எம்மை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் எம் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எம்முடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட சுமன்ன என்பவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தார்கள். பின்னர் சுமனன் என்பவரின் கை மற்றும் கால்களை கட்டி அடித்தார்கள்.
தன்னை அடிக்க வேண்டாம் என கூறியபோதும் பொலிஸார் அதனை கருத்தில் கொள்ளவில்லை. பொலிஸாரின் தாக்குதல் காரணமாக சுமன்ன உயிரிழந்தார்.
உயிரிழந்த பின்னரும் தனது வெறித்தனம் அடங்காமல் பொலிஸார் அடித்தார்கள். மேலும், தனக்கு காலில் ஆணி அடித்து மின்சார கம்பியால் சூடு வைத்தார்கள்.
மேலும், தனது மர்ம உறுப்பை நசித்தார்கள். பின்னர் உயிரிழந்த சுமனனின் உடலை பொலிஸார் ஜூப் வண்டியில் ஏற்றிசென்றார்கள் என தெரிவித்தார்.
இதன்போது உங்களுக்கும், சுமனன் என்பவருக்கும் சித்திரவதை செய்து அடித்தவர்களை அடையாளம் காட்ட முடியுமா என பிரதி மன்றாதிபதி வினாவினார்.
இதனையடுத்து, எதிரி கூண்டில் இருந்த பொலிஸாரை அடையாளம் காட்டியதுடன், அவர்கள் என்னென்ன செய்தார்கள் எனவும் சாட்சியம் வழங்கியிருந்தவர் தெரிவித்திருந்தார்.
இதன் போது இரண்டாவது சாட்சியமாக துரைராசா லோகேஸ்வரன் என்பவரின் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2011ஆம் ஆண்டு 11ஆம் மாதம், 21ஆம் திகதி இரவு சுன்னாகம் பொலிஸார் எம்மை கைது செய்தனர். பின்னர் 2011ஆம் ஆண்டு 11ஆம் மாதம், 24ஆம் திகதி காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சுமனன் என்பவரை பொலிஸார் கைது செய்து அழைத்து வந்தார்கள்.
இதன் போது சுமனது நெற்றியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. தனிநாடு வேண்டுமா என்று கேட்டு எங்களை அடித்தார்கள். அத்துடன், மின்சார கம்பியால் சூடு வைத்ததாகவும் சாட்சியமளிக்கப்பட்டது.
இந்நிலையில், உங்களையும், சுமனனையும் கைது செய்த பொலிஸாரை அடையாளம் காட்ட முடியுமா என அரச தரப்பு விசாரணையின் போது கேட்கப்பட்டது.
இதன் போது எதிரி கூண்டில் இருந்தாவறு சந்தேகநபர்களை அடையாளம் காட்டியதுடம் அவர்களின் பெயர்களையும் சாட்சியாளர் சரியாக குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, எதிரிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் நிலையத்தில் முறையிடவோ அல்லது அவரால் இந்த வழக்கு தொடரப்படவோ இல்லை என மன்றில் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், அவர் தற்போது இல்லை எனவும் அவர்கள் மன்றில் குறிப்பிட்டிருந்தனர். பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற சாட்சி இருந்தாலேயே அவரை எதிரி தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணை செய்யமுடியும்.
அதன் போதே குற்றச் சம்பவத்தின் உண்மை தன்மை மன்றுக்கு தெரியவரும். எனவே இந்த வழக்கில் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லையென குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கினை நெறிப்படுத்தும் அரச சட்டத்தரணி, சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த நபரது மரண விசாரனையில் நபரது உடலில் 20க்கு மேற்பட்ட காயங்கள் உள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவற்றை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கை நடத்தமுடியும் என விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதிபதி மா.இளஞ்செழியன், சித்திரவதை என்பது போர்க்குற்றம் எனவும், அது மனிதவுரிமை மீறல் குற்றமெனவும் குறிப்பிட்டார்.
சித்திரவதை வழக்கினை பாதிக்கப்பட்டவரது உறவினர் பாதுகாவலர் ஆகியோரது முறைப்பாடுகளின் அடிப்படையிலும் நடாத்தமுடியும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பொன்றை நீதிபதி மேற்கோள்காட்டியிருந்தார்.
சித்திரவதைக்கு உள்ளான நபர் உயிருடன் இல்லாவிட்டால் வழக்கை நடாத்த முடியாதென்றால் சித்திரவதைக்கு உள்ளான நபரை கொலை செய்துவிட்டால் வழக்கே இல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், இந்த வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கும், குறித்த எதிரி தரப்பு சட்டத்தரணிகளது ஆட்சேபனை விண்ணப்பத்தையும் நிராகரித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.