இலங்கையின் வடக்கு கிழக்கை இணைப்பதற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்காது என இந்திய வெளியுறவுத்துறைச் செயலலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை அழித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலருடனான சந்திப்பில் கலந்து கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது நடைமுறை சாத்தியமாக எது முடியுமோ அதைச் செய்ய வேண்டும். “இது 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு விடயம். ராஜீவ் காந்தி கொலை உள்பட பல்வேறு விடயங்கள் நடந்து முடிந்துவிட்டன.
எனவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்க இந்திய அரசு வலியுறுத்தாது என்று குறிப்பிட்டார்.
ஆனால், வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிட வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும் அவர் கூட்டமைப்பினரிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு தமக்கு ஏமாற்றமளிப்பதாக குறிப்பிட்டுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழக அரசியல் தலைவர்கள் இது குறித்து பேசவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், 1987-ஆம் ஆண்டு உடன்படிக்கைக்குப் பிறகு, நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
அதற்கு ஏற்றவாறு, மாற்று யோசனையைப் பரிசலீப்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று வெளியுறவுச் செயலாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை, இலங்கை – இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்றும் அர்த்தம் கொள்ளத்தேவையில்லையும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்திய வெளியிறவுத் துறைச் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது இலங்கை இந்திய நட்புறவின் வெளிப்பாடு என்றும்,
இலங்கையை இந்தியா பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதை தெளிவுபடுத்துவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.