ப்ளீஸ்… பெப்சி, கோக் பானங்களுக்காக விளம்பரங்களில் தோன்றாதீர்கள்! நடிகர்களுக்கு வேண்டுகோள்!

பெப்சி, கோக் விளம்பரங்களில் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தோன்றி, புரமோட் செய்ய வேண்டாம் என்று வணிகர்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழர்களின் கலாச்சார அடையாளங்களுள் ஒன்றான ஜல்லிக்கட்டை முடக்க பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. இதற்கு எதிராக இந்த ஆண்டு பொங்கி எழுந்தனர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள். மெரீனாவில் பெரும் புரட்சியே நடந்தது. அரசுகள் இறங்கி வந்தன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிரந்தர சட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பீட்டா அமைப்பு அடங்கவில்லை. மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக கூறிக் கொண்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒரு முடிவினை அறிவித்தனர். இனி தமிழகத்தில் பெப்சி, கோக் போன்ற அந்நிய குளிர்பானங்களைப் பயன்படுத்துவதில்லை.. முற்றிலுமாகப் புறக்கணிப்போம் என்பதுதான் அந்த முடிவு. அதுவும் விற்பனையாளர்களை வற்புறுத்தாமல், வாடிக்கையாளர்களான மக்கள் இந்த குளிர்பானங்களை குடிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றனர்.

இந்த கோரிக்கையை வணிகர் அமைப்புகள் வரவேற்றதோடு, மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, இனி கோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுத்துள்ளனர். ஏற்கெனவே பல கடைகளில் கோக் பெப்சி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் எந்தக் கடையிலும் கோக் பெப்சி விற்கப்படாது என தமிழ்நாடு வணிகர்கள் பேரவை அறிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கமும் இதே முடிவை எடுத்துள்ளது. இதற்கு டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இத்துடன் நில்லாமல், இந்த குளிர்பானங்களுக்கான விளம்பரங்களில் இனி எந்த நடிகர் நடிகையும் தோன்றக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளன இந்த அமைப்புகள்.

அப்படி தோன்றும் நடிகர் நடிகைகள், தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இனி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.

தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதத்துக்கு மேல் குறைந்துவிட்டது அந்த நிறுவனங்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணமான பீட்டா மீது கடும் அதிருப்தியில் அந்த குளிர்பான நிறுவனங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.