அதிமுக ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று கூறியுள்ளார் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின்.
திருச்சி, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடத்துவது எங்களின் சுயநலத்துக்காக அல்ல. தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை அகற்றுவதற்காகத்தான். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையோடு இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
ஜெயலலிதா தலைமையில்தான் ஆட்சி அமைக்க வேண்டும் எனக் கருதி அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். இதுபோன்ற பினாமி ஆட்சியை நடத்துவதற்காக அல்ல.
திமுகவைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நாங்கள் நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைந்த உடனேயே ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும். கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது. அதை எங்களுக்கு அண்ணாவும், கருணாநிதியும் கற்றுத் தரவில்லை. மக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமையும்,” என்றார்.