கடந்த 18ம் தேதி சட்டசபையில் திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் திமுக சார்பில் நடைபெற்றது.
இதில் திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். போராட்டம் முடியும் தருவாயில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை ஒழிப்பதற்காகவே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை சென்றுள்ளார். ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம் வெளியானால் சசிகலா ஆயுள் முழுவதும் கைதியாக இருக்க வேண்டியதுதான்.
அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும்
தமிழகத்தில் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது அமைச்சர் சாதிக் பாட்சா அவரது உடல் நிலை எப்படி உள்ளது என்று பொதுமக்களுக்கு தெரிவித்தார். அதே போன்று எம்ஜிஆர் உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும் டாக்டர் ஹண்டே அவரது உடல் நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்து உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஏன் அது குறித்து அரசு எந்த அறிக்கையையும் வெளியிட வில்லை. அவரது உடல் நிலை குறித்து ஏன் தலைமை செயலாளர் அறிக்கை தரவில்லை. எய்ம்ஸ் டாக்டர்கள் பார்த்துவிட்டு சென்றார்களே அவர்கள் கூட அறிக்கை அளிக்கவில்லை. லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்த டாக்டரும் அறிக்கை எதுவும் தரவில்லை. ஏன்?
அவசர பிரஸ் மீட்
நிலை இப்படி இருக்க, சசிகலா முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்ட உடன், ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க என்று சொல்லி செய்தியாளர் சந்திப்பு ஒன்று அவசர அவசரமாக நடைபெற்றது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பிரஸ் மீட் வைக்காத அறிக்கை கொடுக்காத அரசு, ஏன் திடீரென அப்போலோ மருத்துவர்களை வைத்து பிரஸ் மீட் நடத்தியது?
ஆயுள் முழுக்க களிதான்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்ற அந்த செய்தியாளர் சந்திப்பிலும் டாக்டர்கள் முன்னுக்கு பின் முரணாகவே பேசினார்கள். பல முரண்பாடுகள் அதில் இருந்தன. ஆக, ஜெயலலிதா மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்தினால் சசிகலா ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியதுதான் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.