எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்: அமெரிக்காவுக்கு கம்போடியா எச்சரிக்கை

கம்போடியா ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்நாட்டின் தலைநகர் நாம் பென் நகரம்.
கம்போடியா அரசாங்கத்தால் 1993ம் ஆண்டு ஏற்கப்பட்ட நாட்டின் அரசியல் சாசனத்தின்படி அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களால் ஆட்சி செலுத்தி வருகிறது.
கம்போடிய மக்களாட்சி பல கட்சி முறையை கொண்டது. தலைமை அமைச்சர் அரசாங்கத்தின் தலைவர். கம்போடிய மன்னர் நாட்டின் தலைவர். தலைமை அமைச்சர் (பிரதமர்), மன்னரால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் வழிகாட்டுதலின் மூலம் நியமிக்கப்படுகிறார். பிரதமருக்கும், அவரது அமைச்சரவைக்கும் எல்லா மூல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கம்போடியாவில் தேசத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள அரசியல் கட்சிகளை நீக்கம் செய்யும் வகையில் அந்நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதனை தொடர்ந்து, கம்போடியாவின் இந்த அரசியல் சட்ட திருத்தத்திற்கு அமெரிக்கா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கம்போடியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று அந்நாட்டு பிரதமர் ஹுன் சென் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாமல் இதர அனைத்து அயல் நாடுகளுக்கும் கம்போடியா சார்பில் இந்த வலியுறுத்தலை அவர் முன் வைத்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஹுன் சென், “நான் உங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடவில்லை. அதனால் நீங்களும் எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
நாங்கள் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கவில்லை, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். கம்போடியாவின் சுதந்திரம், இறையாண்மை, உள்நாட்டு விவகாரத்திற்கு மரியாதை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.