உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் விராட் கோலி. 28 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் என 3 நிலைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
விராட் கோலி சமீபகாலமாக தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். அவர் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்து இருந்தார்.மற்றொரு முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறும் போது, விவியின் ரிச்சர்ட்சும், தெண்டுல்கரும் செய்த கலவை விராட் கோலி எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான வீரேந்திர சேவாக் ”விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி சிறந்த கேப்டனும் ஆவார்.
கிரிக்கெட்டில் விராட் நிறைய தேர்ச்சி பெற்று விட்டார். அவர் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணிக்கு நிறைய பெருமைகளை தேடிக் கொடுத்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் உலகின் தலை சிறந்த வீரராகவும் திகழ்கிறார்” என்றார்.
கிரிக்கெட் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை கோலி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.