`கபாலி’, `பில்லா’ வழியில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்.  தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை  மையமாக வைத்து உருவாகி வரும் `வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி,  ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்த `ரெமோ’ பட வெற்றியை தொடர்ந்து 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் `வேலைக்காரன்’ படத்தையும்  தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் `வேலைக்காரன்’ படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் அடுத்த கட்ட  படப்பிடிப்பை மலேசியாவில் 35 நாட்கள் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்  மற்றும் தொழிற்சாலைகளில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இதற்கு முன்னதாக ரஜினியின் `கபாலி’, அஜித் நடித்த `பில்லா’, விக்ரமின் `இருமுகன்’, விஜய்யின் `குருவி’ உள்ளிட்ட பல  படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உழைப்பாளர் தினமான மே 1-ஆம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.  அதனைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.