கிம் உடற்கூறு சோதனை சட்டவிரோதமானது: மலேசியா மீது வடகொரியா குற்றச்சாட்டு!

வடகொரியாவில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. நாட்டின் தலைவராக 33 வயது கிம் ஜாங் அன் பதவி வகித்து வருகிறார். இவருடைய அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46). இருவரும் அண்ணன், தம்பி என்றாலும், ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்தவர்கள் ஆவர்.

கடந்த 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மக்காவ் செல்வதற்காக கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கிம் ஜாங் நாம் காத்திருந்தார். அப்போது அவர் மீது பயங்கர வி‌ஷத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரை பதவிபோட்டி காரணமாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சதித்திட்டம் தீட்டி கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கிம் ஜாங் நாம் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றி நேரில் பார்த்தவர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து இருந்தனர். 2 பெண்கள் அவருடைய முகத்தின் மீது வி‌ஷ ஊசிகளை குத்திவிட்டு ஓடியதாகவும் கூறப்பட்டது. இந்த கொலை தொடர்பாக விசாரணையை தீவிரம் காட்டி வரும் மலேசியா, வடகொரியா  அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 10 தினங்களாக கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்த வடகொரியா இந்த விவகாரத்தில் முதன்முறையாக நேற்று கருத்தை தெரிவித்துள்ளது. கிம் ஜாங் நாமின் உடலை ஒப்படைக்க வேண்டிய கடமை மலேசியாவுக்கு உள்ளது என்றும் பிரதே பரிசோதனையோ தடயவியல் சோதனையோ மேற்கொண்டால் அது சட்ட விரோதம் மற்றும் முறையற்றதாக அமையும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொலை தொடர்பாக கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதற்காக சட்ட நிபுணர்களை மலேசியாவுக்கு  அனுப்ப வடகொரியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.