முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ராணுவ புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் அமல் கருணாசேனவிடம் எதிர்வரும் நாட்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல ஆங்கில பத்திரிகையொன்றின் ஊடகவியலாளரான கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் அமல் கருணாசேனவால் அதுகுறித்து, தேசிய புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்ட கபில ஹெந்தவிதாரணவிற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அதனை அறிவித்ததாகவும் அவர்களுக்கிடையிலான தொலைபேசி உரையாடல்கள் பற்றிய பதிவை ஆய்வுசெய்ததில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டே அமல் கருணாசேனவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தொடர்ந்து வரும் நாட்களில், கடந்த ஆட்சிக்காலத்தில் புலனாய்வு பிரிவில் செயற்பட்ட மேலும் சில முக்கிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துவந்த ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் ராணுவத்தின் மேஜர் தர அதிகாரியொருவர் உள்ளிட்ட ஐந்து ராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.