இலங்கை இராணுவத்தை குற்றம்சாட்டும் விதமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவித்தல் ஒன்றின் ஊடாக பதிலளித்துள்ளார்.
யுத்தத்தினால் விதவையாக்கப்பட்டுள்ள வடக்கு பெண்களை இலங்கை இராணுவத்திலுள்ள சிலர் பாலியல் அடிமைகளாக வைத்துள்ளதாக சந்திரிக்கா குமாரதுங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தின் மீது வேண்டுமென்று சுமத்தும் ஒரு குற்றச்சாட்டாகவே இது அமைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் எதிரிகள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்களைப் போலவே, இலங்கையின் முன்னாள் முப்படைகளின் தளபதியும் முன்னாள் ஜனாதிபதியுமான ஒருவரும் இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.