வெளிநாட்டு காரால் சிக்கலில் சிக்கிய நடராசன்: மோடி அரசின் அடுத்த இலக்கு?

வெளிநாட்டு கார் மோகத்தால் தற்போது மத்திய புலனாய்வு அமைப்பினால் சிக்கலில் சிக்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராசன்.

தமிழகத்தில் பெரும்புள்ளிகள் வெளிநாட்டுக் கார் விஷயத்தில் ரெய்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் காலகட்டம் இது. முன்பு ஒருமுறை ஸ்டாலினின் ஹம்மர் காருக்காக CBI ரெய்டு வந்தது. தற்போது CBI ரெய்டில் சிக்கிக்கொண்டு தவிப்பவர், சசிகலாவின் கணவர் நடராசன். இவரைச் சிக்கலில் தள்ளியிருப்பது டொயோட்டா லெக்ஸஸ் CS300 என்னும் 1994 மாடல் கார்.

இந்திய கார்களின் சந்தை மதிப்பு உயர வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு இறக்குமதி கார்களுக்கு அரசாங்கம் கடுமையான வரி விதித்தித்து வருக்கிறது. அதாவது, வெளிநாட்டுக் கார்களை இறக்குமதிசெய்தால் இந்தியாவில் அதற்கென 170%-ல் இருந்து 200% வரை சுங்கவரி செலுத்த வேண்டும்.

இது இருச்சக்கர வாகனம் என்றால், 140%. அதாவது, வெளிநாட்டில் விற்கப்படும் ஒரு கோடி ரூபாய் காரை இந்தியாவில் நீங்கள் முறைப்படி ஓட்ட வேண்டும் என்றால், கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும்.

அந்த வகையில், லண்டனில் இருந்து நடராசன் வாங்கியதாகச் சொல்லப்படும் டொயோட்டா லெக்ஸஸ் CS300 எனும் 1994 மாடல் வெளிநாட்டுக் காரின் அப்போதைய விலை இந்திய மதிப்பில் இரண்டு கோடி ரூபாய்.

நடராசன் இந்த காரை இந்தியாவுக்கு இறக்குமதி செய்த விதத்தில் சில கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நடராசனுடன் சேர்த்து மொத்தம் 4 பேரைக் குற்றவாளியாக்கியிருக்கிறது CBI.

ஆனால் சற்றும் அசராத நடராசன், இது, புது கார் இல்லை; பாஸ்கரன் கல்யாணத்துக்கு கிஃப்ட்டாக வந்ததால், இதைப் பழைய கார் லிஸ்ட்டில்தான் சேர்க்க வேண்டும் என்று அதற்கான ஒரிஜினல் இன்வாய்ஸைக் காண்பிக்கிறார் சி.பி.ஐ அதிகாரிகளிடம்.

பழைய கார் என்றால், அதற்கான வரி விதிப்பு 40% வரை குறையலாம். கடுப்பான CBI, மீண்டும் சில ரெய்டுகளைப் போட்டு, இல்லை; இது 1994 மாடல் பிராண்ட் புத்தம் புதிய கார்தான். இது, மிகப் பெரிய எக்கனாமிக் அஃபென்ஸ். அரசாங்கத்தை ஏமாற்றிய நடராசனுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறது.

முன்பு சசிகலாவும் ஜெயலலிதாவும் அடிக்கடி வழக்கு விஷயமாக, நீதிமன்றத்துக்கும் சிறைக்கும் அலைந்ததுபோல, நடராசன் தற்போது கோர்ட்டும் காருமாக அலைந்துகொண்டிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி எஸ்.பாஸ்கரன், பிப்ரவரி 27-க்கு இதற்கான வாய்தாவைத் தள்ளிவைத்திருக்கிறார்.