பாகிஸ்தானில் உள்ள செவான் நகரில் லால் ஷாபாஸ் கலந்தர் வழிபாட்டுதலத்தில் கடந்த 16-ந் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு படைகளுக்கு நவாஸ் ஷெரீப் அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கராச்சி நகரில் மாங்க்ஹோபிர் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு நேற்று அதிகாலை போலீசார் விரைந்து சென்றனர். அங்கிருந்த பயங்கரவாதிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.
உடனே போலீசாரும் தகுந்த பதிலடி தந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பி ஓட்டம் பிடித்து விட்டனர்.
பலியான பயங்கரவாதிகள் சைபுல்லா, ஹனீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் அவர்கள் குறிவைத்திருந்த போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
தப்பிய பயங்கரவாதிகளை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.