முதல்வரை மக்கள் தேர்வு செய்ய தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வரை தேர்வு செய்வார்கள் என சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்னர், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகர் கருணாஸ் கூறியதாக, ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது. இதையடுத்து, கருணாஸை விமர்சித்து அதிகம் பேர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் மீது புகார் செய்வதற்காக கருணாஸ் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார்.
புகாரளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கருணாஸ், “முதல்வர் தேர்வு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நான் கூறாத கருத்தை கூறியதாக சில பேர் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பி வருகின்றனர். நான் ஒரு சமூகத்தை சார்ந்த இயக்கம் நடத்தி வந்தாலும், அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கிறேன்.
நான் சட்டமன்ற உறுப்பினரானது எனது சமூகத்தில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை. எனக்கு வாக்களித்த 75,000 மக்களுக்காக நான் உண்மையாக பணியாற்றி வருகிறேன். இனி எந்த கருத்தை நான் தெரிவிப்பதாக இருந்தாலும், வெளிப்படையாகவே தெரிவிப்பேன். எனவே, சமூக வலைதளங்களில் நான் கூறியதாக ஏதேனும் கருத்து வந்தால் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம்.” எனக் கூறினார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட விரிசலின் போது சசிகலாவின் ஆதரவாளராக நின்றவர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.