`பவர்பாண்டி’ படத்தின் 2 முக்கிய தகவல்களை வெளியிட்ட தனுஷ்

சினிமா முறையில் பல்வேறு திறமைகளை உடையவர் நடிகர் தனுஷ் என்பது நாம் அறிந்ததே. நடிகராக அறிமுகமாகிய இவர்  பின்னர் பாடகர், பாடலாசிரியர் என தனது திறமைகளை சினிமாவில் வெளிக்கொணர்ந்தார். அதனைத் தொடர்ந்து படங்களை  தயாரிக்கவும் செய்தார். இந்நிலையில், தனுஷ் தற்போது ராஜ்கிரணை வைத்த `பவர்பாண்டி’ என்ற புதிய படத்தை இயக்கி  முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு) அன்று வெளியாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்திற்கான டப்பிங் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தனுஷ் தனது  டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது,

`பவர்பாண்டி’ படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளன. மிகவும் சிலிர்ப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதை உணர்கிறேன்  என்று குறிப்பிட்டுள்ள தனுஷ், சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 9-ஆம் தேதி வெளியாகும்  என்றும் அறிவித்துள்ளார்.

`பவர்பாண்டி’ படத்தில் நதியா, பிரசன்னா, சாயாசிங், வித்யூ ராமன், டெல்லி கணேஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் தனுஷ், மடோனா செபாஸ்டின், கவுதம் மேனன், திவ்யதர்ஷினி நடித்துள்ளனர். இயக்குநர்,  ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம்  தயாரித்துள்ளது.