சாம்பிராணி புகை போடுவதை அனைத்து மதத்தினருமே பின்பற்றி வருகிறார்கள். எதிர்மறை சக்திகளை அகற்றும் என்றும், விஷ ஜந்துக்களை விரட்டும் என்றும் கூறுகிறார்கள்.
சிறந்த கிருமி நாசினி என்றும் கூறுவதுண்டு. மருத்துவரீதியாக சாம்பிராணி புகை போடுவது ஆரோக்கியமானதுதானா ? விளக்கமளிக்கிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் வினோத்குமார்.
‘‘Frankincense என்ற ஒரு மரத்தின் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் சாம்பிராணி. கலாசார ரீதியான, மதரீதியான பாரம்பரியம் கொண்ட நம் நாட்டில் எல்லா இடங்களிலுமே சாம்பிராணியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதனால் சரி என்றோ, தவறு என்றோ இதை மேலோட்டமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு மருத்துவராக சாம்பிராணி புகை போடுவதில் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்ற விஷயத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
முன்பு… அதாவது நம் அப்பா காலத்துத்தலைமுறையில் இயற்கையான சாம்பிராணியைப் பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் வசித்த இடமும் காற்றோட்டமுள்ளதாக, விசாலமானதாக இருந்தது.
ஆனால், இன்று இரசாயனக் கலப்பு மிகுந்த செயற்கை சாம்பிராணிகள் நிறைய விற்கப்படுகின்றன. வாசனைக்காகவும், அதிக புகை வரவேண்டும் என்பதற்காகவும் இதுபோல் இரசாயனங்களைக் கலக்கிறார்கள்.
வீடுகளும் இப்போது நெருக்கமானதாக, இடவசதி குறைந்ததாக இருக்கிறது.இந்த சூழ்நிலையை உணர்ந்து தரமான சாம்பிராணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதும், வீட்டில் இருந்து புகை வெளியேறும் அளவுக்கு காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதும் அவசியம்.
அதிக புகை வரும் அளவுக்கு சாம்பிராணி போடுவதையும் தவிர்க்கலாம்.இல்லாவிட்டால் கண் எரிச்சல், கண் சிவத்தல், மூக்கில் தண்ணீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாம்பிராணி புகையின் இரசாயனங்களால் வீசிங் வரக் கூடும். அதனால், சாம்பிராணியைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே என் பதில்.’’