ஜெயலலிதாவின் உருவபடத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என்பதா? என திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மக்களுக்காக சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அரசியல் நாகரீகம் இல்லாமல் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பற்றி காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது. ஜெயலலிதாவை தமிழக மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது என பன்னீர் செல்வம் கூறியுள்ளார். விமர்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு பயனுள்ள வேலையை செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக இன்று தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்த ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை தலைமைச் செயலகத்திலிருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
குற்றவாளி ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என பொது மக்களும் வலியுறுத்துகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்படும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை செயலர் உறுதியளித்துள்ளார் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.