தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீபா ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத அதிமுக நிர்வாகிகள் தீபாவுக்கு ஆதரவளித்து வந்தனர். இந்நிலையில் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தீபா தொடங்கினார். அதற்கான கொடியை அறிமுகப்படுத்தியதோடு, சில முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகளையும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் என சென்னையில் உள்ள தீபாவை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் எந்த கட்சியாக இருந்தாலும் வயதானவர்கள் தான் தலைவர்களாக இருந்து ஆட்சியில் அதிகாரம் செலுத்தி வருகின்றனர். ஆனால் வடமாநிலங்கள் இதுபோன்ற ஒரு நிலை இல்லை. தமிழகத்திலும் இளைய தலைமுறையினர் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காக ஜெ.தீபாவுக்கு மாணவர்களும், இளைய சமுதாயத்தினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநில முழுவதும் நிர்வாகிகளை நியமிப்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தீபா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.