ஜெயலலிதாவுக்கு ஒரு தோழி கிடைத்ததைபோல், அவரது அண்ணன் மகள் தீபாவுக்கும் சரண்யா என்ற ஒரு தோழி கிடைத்துள்ளார். அவர்தான் பேரவையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் பிரசாரங்களை விடியோ எடுப்பதற்காக ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு எல்லாம் சசிகலாவும் உடனிருந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் சசிகலாவும், நடராஜனும் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.
கடந்த 1991-96-ஆம் ஆண்டு முதல்முறையாக முதல்வரான ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தினரை தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தங்க அனுமதித்தார். பின்னர் சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனை தத்து எடுத்த ஜெயலலிதா, அவரது திருமணத்தை நடத்தியதன் மூலம் மக்களின் அதிருப்தியை சம்பாதித்தார்.
நடராஜனின் செயல்பாடு
இந்நிலையில் நாளாக நாளாக ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலாவின் கைஓங்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நடராஜனின் தலையும் தூக்க ஆரம்பித்ததால் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவான நிர்வாகிகளை ஜெயலலிதா ஓரங்கட்டியே வைத்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது நிழல் போல் சசிகலா தொடர்ந்தார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தபோது கூட சசிகலா தனது தோழி என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இவ்வாறு மரணப்படுக்கையின்போது ஜெயலலிதாவுடன் சசிகலா பயணித்திருந்தாலும் அவர் பொதுமக்களின் செல்வாக்கை பெறவில்லை.
தீபா வருகை
ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் ஆகியோரை ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையும், இறந்த பிறகும் கிட்டயே நெருங்கவிடவில்லை சசிகலா. இதுதொடர்பாக சசிகலா மீது தீபா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
நிர்வாகிகள் நியமனம்
இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையை ஏற்படுத்திய தீபா அதற்கான நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். பேரவைத் தலைவராக ஆர்.சரண்யாவையும், மாநிலச் செயலாளராக ஏ.வி.ராஜாவையும், நியமித்தார். பின்னர் பேரவையின் பொருளாளராக தானே செயல்படுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
என் தோழி சரண்யா
தி.நகரில் உள்ள தீபா வீட்டில் செய்தியாளர்களை தீபா இன்று சந்தித்தார். அப்போது தீபா பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சரண்யா யார் என்று செய்தியாளர்கள கேள்வி எழுப்பினர். அதற்கு சரண்யா தனது தோழி என்று தீபா தெரிவித்தார்.