பனங்கிழங்கு: மருத்துவ மகிமை!!

‘கற்பக விருட்சம்’ என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடை இது. அதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஊட்டச்சத்து பானம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், உணவு ஆராய்ச்சி கழகமும் 1984 முதல் 1986-ம் ஆண்டு வரை நடத்திய ஆய்வில் பட்டியலிடப்பட்ட பதனீரில் உள்ள சத்துக்கள் ஆச்சரியப்பட வைக்கும் ரகம். 8 அவுன்ஸ் பதனீரில் காரத்தன்மை 7.2 கிராமும், சர்க்கரை சத்து 28.8 கிராமும், சுண்ணாம்பு சத்து 35.4 மில்லி கிராமும், இரும்பு சத்து 5.5 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராமும், தயாமின் 82.3 மில்லி கிராமும், ஆஸ்கார்பிஸ் அமிலம் 12.2 மில்லி கிராமும், புரதசத்து 49.7 மில்லி கிராமும் இருப்பதுகண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இதில் நிகோடிக் அமிலமும், வேறு சில சத்துக்களும் கலந்திருக்கிறது. இதனால் பதனீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழலாம்.

பதனீரை இறக்கி அதை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கிறார்கள். கருப்பட்டியிலும் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. 100 கிராம் கருப்பட்டியில் புரோட்டின் 1.04 கிராமும், சுண்ணாம்பு சத்து 0.86 கிராமும், சுக்ரோஸ் 76.86 கிராமும் உள்ளது. பெண்களுக்கு கர்ப்பகாலத்திலும், குழந்தை பிறந்த பிறகு லேகியம் தயாரிக்கவும் கருப்பட்டி பயன்படுகிறது.

பனை மரத்தில் இருந்து கிடைப்பதில் நாவிற்கு சுவை சேர்க்கும் மற்றொரு பொருள் நுங்கு. இதில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. நுங்கை பதனீரில் போட்டு குடித்தால் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படாது. சுண்ணாம்பு சத்தும், இரும்பு சத்தும் அதிகரிக்கும். பனை மரத்தில் கொத்து கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டாமல் விட்டுவிட்டால் நன்றாக பழுத்து பனம்பழமாகிவிடும். இதுவும் மிகுந்த சுவையுடையது. ஏராளமான சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

மஞ்சள் பனங்கிழங்கிற்கு சுவை சேர்ப்பதுடன் கிருமி நாசினியாகவும் பயன்படும்.

நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம். வாயுத்தொல்லை நீங்கும். மிக்சியில் போட்டும் மாவாக்கி வைத்துக் கொள்ளலாம்.

வேகவைக்காத பனங்கிழங்கை நறுக்கி காயப்போட்டு மாவாக்கி அதை சுவைக்கு ஏற்ப கூழாக தயாரித்தோ, உப்புமா செய்தோ, தோசையாக தயாரித்தோ சாப்பிடலாம். பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேகவைத்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இடித்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். பனங்கிழங்கை மாவாக்கி ஓட்ஸ் தயாரித்து குடித்தால் பசி தீரும். சில நோய்களும் கட்டுப் படும்.

பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும்போது விதையில் இருந்து தவின் கிடைக்கும். இது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாகும்.