இந்திய சினிமா உலகம் என்னை தத்து எடுத்தது: நடிகர் ஷாருக்கான் உருக்கம்

மும்பை, ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், பிரபல சினிமா இயக்குனர் யாஷ் சோப்ரா நினைவு 4-வது தேசிய விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் யாஷ் சோப்ரா நினைவு தேசிய விருது இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், நடிகை ரேகா ஆகியோர் இணைந்து ஷாருக்கானுக்கு வழங்கினர். விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசியதாவது:- கடந்த 25 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு தெரிந்தது எல்லாம் காலையில் மேக்-அப் போட்டு நடிப்பது மட்டும்தான்.

நான் மும்பைக்கு வந்தபோது, எனக்கு தாயும் இல்லை. தந்தையும் இல்லை. இருந்த ஒரு சகோதரிக்கோ உடல்நலம் சரியில்லை. அப்போது எனக்கு என்று ஒரு குடும்பமும் இல்லை. ஆனால், இந்திய சினிமா உலகம் இருகரங்களாலும் அரவணைத்து, என்னை தத்து எடுத்துக்கொண்டது.

ஆனால் இன்றைக்கோ நான் 100 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட குடும்பத்தைப் பெற்றிருக்கிறேன். இதற்காக நான் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இந்த இரவு என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் என்னைப்பற்றி பேசினார்கள். என்னைப்பற்றிய குறும்படம் காட்டினார்கள். இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் வாழ்க்கையில் சந்தித்த எல்லோரும் என்னிடம் காட்டிய அன்பு, அக்கறை, பரிவு, ஊக்கம் என இவை அனைத்தும் இல்லையென்றால், இந்த அளவிற்கு உயர்ந்திருக்க முடியாது.

பாம் அத்தையைப்பொறுத்தமட்டில் (யாஷ் சோப்ராவின் மனைவி பமீலா) அவர் எனது வளர்ப்புத்தாய் போன்றவர். நான் அவருடன்தான் வளர்ந்தேன். யாஷ் சோப்ராவுடன் வேலை செய்த ஒவ்வொருவரும் அவரது பிள்ளைகளை போன்றவர்கள்தான். அவரது கடைசி படம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவருடன் வேலை செய்கிற அதிர்ஷ்டம் எனக்கு வாய்த்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் விருது வழங்குவதில் ஒரு பகுதியாக ஷாருக்கானின் கையில் நடிகை ரேகா தங்கக்காப்பு ஒன்றை அணிவித்து இருந்தார். இது குறித்து ஷாருக்கான் பேசும்போது குறிப்பிடுகையில், “இந்த இரவு என் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்தது. ஆனால் நடிகை ரேகா எனது கையில் ராக்கி கட்டியதுதான் வருத்தம் அளிக்கிறது” என தமாஷாக கூறினார்.

இதேபோன்று நடிகை ஜெயப்பிரதா பற்றியும் அவர் குறிப்பிட்டு அனைவரையும் சிரிக்க வைத்தார். அப்போது அவர் நடிகை ஜெயப்பிரதாவை நோக்கி, “என் இளமைக்கால வாழ்வில் நீங்கள் என்னை ஈர்த்திருக்கிறீர்கள். உங்களை நினைத்து வண்ணக்கனவுகள் கண்டிருக்கிறேன். ஆனால் அதை சொல்வதற்கான வாய்ப்புதான் கிடைக்காமல் போய்விட்டது. நீங்கள் ரொம்பவும் அழகாக இருப்பதாக நான் நினைத்தேன். கவர்னர் இங்கே இருப்பதால் இதற்கு மேல் கூறக்கூடாது என கருதுகிறேன்” என கூறி தமாஷ் செய்தார்.