ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியது.
அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இலங்கை விவகாரம் பற்றி எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.
மார்ச் மாதம் 24ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த 34வது அமர்வில் மார்ச் 22ம் திகதி இலங்கை குறித்து எழுத்துமூல அறிக்கையொன்றை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கின்றார்.
இருந்த போதும் ஆரம்ப உரையில் அவர் இலங்கை பற்றி குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இலங்கை தொடர்பில் அவர் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.
இலங்கை மாத்திரமன்றி எந்தவொரு நாட்டையும் தனித்துக் குறிப்பிட்டு அவர் பேசியிராத போதும், பொதுவாக மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது மற்றும் சர்வதேச நாடுகள் அதனைப் பின்பற்றுவது தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
பூகோள மனித உரிமைகளுக்கு எதிராக பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் சில அரசியல் தலைவர்கள், சர்வதேச அல்லது பிராந்திய ஒப்பந்தங்களிலிருந்து விலகுவதாகவும், அவ்வாறான அமைப்புக்களிலிருந்து விலகப் போவதாகவும் அச்சுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஏழு தசாப்தங்களில் உலக நாடுகள் மனித உரிமை விடயத்தில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை அவர்கள் மீட்டுப் பார்க்க வேண்டும்.
இவ்வாறான அச்சுறுத்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றால் உலக மனித உரிமையில் எதனை இழக்கப் போகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும் எனவும் ஐ.நா ஆணையாளர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் மனித உரிமைகள் தொடர்பான பல்தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அது மாத்திரமன்றி உலகளாவிய காலமுறையில் மீளாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
எனது அலுவலகம் பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சகல மட்டத்திலுமான சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இணங்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜனவரி மாதம் 21ம் திகதி உலகின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடைபெற்றன. அது ஒரு நபருக்கு எதிராகவோ அல்லது அவருடைய அரசுக்கு எதிராகவோ நடத்தப்பட்டதென்றே கருதுகின்றேன்.
பெண்களின் உரிமைகளுக்காக இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டன. இதில் எனது அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டமையை இட்டு பெருமையடைகிறேன். நாம் சகலருடைய உரிமைகளுக்காகவும் ஒன்றிணைய வேண்டும்.
இது போன்ற அரசியல் தலைவர்கள், லீக் ஒவ் நெஷன்ஸ் காலத்திலும் இருந்ததுடன், அப்போதைய பன்னாட்டு கட்டமைப்பிலிருந்து விலகப் போவதாக எச்சரித்திருந்தார்கள். அப்போது ஏற்பட்ட விடயங்கள் குறித்த அனுபவங்கள் எமக்கு உள்ளது.
எனவே நாம் சிலை போன்று அமர்ந்திருக்க மாட்டோம். நாம் இழப்பதற்கு பல இருப்பதுடன், பாதுகாப்பதற்கும் பல விடயங்கள் இருக்கின்றன.
எமது உரிமைகள் ஏனையவர்களின் உரிமைகள் என்பன இது போன்ற அரசியல் லாப நோக்கமுமடையவர்களால் தூக்கி எறியப்பட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.