காந்தக்குரலில் எப்போதும் சாந்தன் எம்முடன் வாழ்வார்: சரவணபவன் எம்.பி. இரங்கல்

ஈழத்துப் பாடகர் சாந்தன் உடலளவில் எம்மை விட்டு நீங்கினாலும், அவர் தனது காந்தக் குரல் மூலம் எம்முடனே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது இரங்கல் செய்தியில்

குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்துப் புரட்சிப் பாடகர் சாந்தன் உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் மதியம் உயிரிழந்தார். அவரது மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

“இந்த மண் எங்கள் சொந்த மண்…”, “கண்ணில் வடிக்கும் நீரை துடைத்தே வாருங்கள்…” என்று ஈழத்து இன விடுதலைப் போராட்டத்துக்கு இளைஞர்களை தனது காந்தக் குரலால் அழைத்து இன மீட்புக்காகப் பெரும் பங்களிப்புச்

செய்த பாடகர் சாந்தன் எம்மை விட்டு விடைபெற்றுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இன விடுதலைப் போராட்டமொன்றில் போராடும் போராளிகளுக்கு மனவலிமை மிகவும் அவசியமானது. தனது பாடல்களால் எமது இளைஞர்கள் உள்ளிட்ட எமது இனத்திடையே இனவுணர்வையும் மனத்தைரியத்தையும் பெருக்கியவர் சாந்தன். இளைஞர்களையும் மக்களையும் போராட்டக் களத்துக்குக் கொண்டு வருவதில் கலை, இலக்கியங்களின் பங்கு மிக முக்கியமானது. கலைஞர்களின் பங்கும் அளப்பரியது.

அந்தப் பங்கைச் செய்து முடித்த பின்புதான் சாந்தன் எம்மிடம் இருந்து ஓய்வு பெற்றிருக்கின்றார்.

எமது போராட்டம் கபடமாக மௌனிக்கப்பட்டதையே நினைத்து மிகவும் வேதனையோடு எம்மிடம் இருந்து விடைபெற்றுள்ள சாந்தன், உடலளவில் எம்மை விட்டு நீங்கினாலும் அவர் தனது குரல் மூலம் எம்முடன் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என தனது இரங்கல் அறிக்கையில் சரவணபவன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.