இலங்கை கோரிக்கை விடுத்தால் கடும் நிபந்தனையுடன் கூடிய கால அவகாசம் வழங்குங்கள்: சம்பந்தன்

இலங்கை கால அவகாசம் கோரினால் கடும் நிபந்தனையுடன் கூடிய கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் பிரான்ஸ் செனட்டர்களை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் சந்தித்துப் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது இலங்கையில் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு, மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி என்பன தொடர்பில் அவர் பிரான்ஸின் குழுவினருக்கு விளக்கமளித்தார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான யோசனைகளில் சிறிய அளவு மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் யோசனை நிறைவேற்றத்துக்காக இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரினால் அந்த கால அவகாசம், கடுமையான நிபந்தனைகளின் கீழ் வழங்கப்படவேண்டும் என்று சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.