ட்ரையான ஆடுகளம் தயாரிக்க வேண்டாம் என எச்சரித்தேன்: புனே ஆடுகள பராமரிப்பாளர் சொல்கிறார்!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக அமைக்கப்பட்ட சவாலான ஆடுகளம்தான் ஆஸ்திரேலியா தொடரின்போது அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆடுகளத்தில் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பே தண்ணீர் விடுவதை நிறுத்தி மிகவும் ட்ரையான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள். இதனால் முதல் ஓவரில் இருந்தே பந்து டர்ன் ஆக ஆரம்பித்துவிட்டது.

இந்த ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் வார்னே கூறுகையில், இது 8-வது நாள் பிட்ச் போன்று தோன்றுகிறது என்றார். அதேபோல் சுனில் கவாஸ்கர் மற்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆகியோரும் ஆடுகளம் அமைக்கப்பட்டது குறித்து தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்.

புனே மைதானத்தின் ஆடுகள பராமரிப்பாளர் பாண்டுரங் சல்காயோன்கார், போட்டி தொடங்குவதற்கு முன் ஆடுகளத்தில் பந்து பறக்கும் என்றார். அதாவது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறினார். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் பந்து பறப்பதற்கான வழியில்லை என்று தனது கருத்தை தெரிவித்திருந்தார். போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், ஆடுகளத்தை பார்வையிட்ட பின்னர் முதல் ஓவரில் இருந்தே பந்து டர்ன் ஆகும் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் புனே ஆடுகள பராமரிப்பாளர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுபோன்று ட்ரையான ஆடுகளம் வேண்டாம் என்று பிசிசிஐ-யிடம் எதிர்ப்பு தெரிவித்ததாக புனே ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புனே ஆடுகள பராமரிப்பாளர் பாண்டுரங் சல்காயோன்கார் மேலும் கூறுகையில் ‘‘புற்களை முற்றிலும் செதுக்கி எடுத்து ட்ரையான ஆடுகளம் தயார்படுத்துவதற்கு பிசிசிஐயிடம் நான் தெளிவான என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். நான் அவர்களது பெயரை வெளியிட விரும்பவில்லை. ஆனால் அவர்களிடம் தண்ணீர் ஊற்றாமல், புற்களை செதுக்கி எடுத்துவிட்டால் பேராபத்தில் முடியும் என்று நான் அவர்களிடம் கூறினேன். இதனுடைய பாதிப்பை உணர்ந்து, என்னுடைய முழு முயற்சியால் அவர்களை புரிந்து கொள்ள வைக்க முயற்சி செய்தேன்.

நீங்கள் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் ஆடுகள தயாரிப்பாளர் என்ற முறையில் உங்களுடைய பணியை ஏன் செய்யவில்லை? என்று கேட்டலாம், என்னால் என்ன செய்ய முடியும்?. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், சர்வதேச போட்டிக்கான ஆடுகளத்தை தயார் செய்வதில் எங்களுடைய உதவி குறைக்கப்படுகிறது. பி.சி.சி.ஐ. ஆடுகள கமிட்டியில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையில் அவர்களுடைய உத்தரவைதான் நாங்கள் பின்பற்ற வேண்டியுள்ளது.

இப்படித்தான் ஆடுகளம் தயாரிக்க வேண்டும் என்று அணி நிர்வாகத்திடம் இருந்தோ அல்லது இந்திய அணியில் இருந்தோ எந்த கோரி்க்கையும் வரவில்லை. அவர்கள் மூத்த ஆடுகள பராமரிப்பாளரிடம் வேண்டுமென்றால் பேசியிருக்கலாம். புனேவில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே ஆடுகளம் முற்றிலும் டர்ன் ஆகும் வகையில் தயார் செய்தது எனக்கு உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், என்னால் என்ன செய்ய முடியும்?’’ என்றார்.