இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு இந்த ஆண்டின் சிறந்த கேப்டன் விருது வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் இணையதளமான இ.எஸ்.பி.என்.கிரிக் இன்போ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டின் (2016-17) விருதுக்கான வீரர்களின் பட்டியலை முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வு கமிட்டி அறிவித்து இருந்தது.
இதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி சிறந்த கேப்டன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். டெஸ்ட் போட்டியில் விராட்கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை குவித்ததை தொடர்ந்து அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் 198 பந்துகளில் 258 ரன்கள் குவித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதுக்கும், இதே போட்டி தொடரில் 3-வது டெஸ்ட் போட்டியில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 178 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் விருதுக்கும், கயானாவில் நடந்த 3 நாடுகள் போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்த வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர் விருதுக்கும், கொல்கத்தாவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர் தூக்கியதுடன், 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் பிராத்வெய்ட் 20 ஓவர் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் விருதுக்கும், 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்த வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிகுர் ரஹ்மான் 20 ஓவர் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் விருதுக்கும், இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 19 விக்கெட்டுகள் கைப்பற்றிய வங்காளதேச இளம் வீரர் மெஹதி ஹசன் மிராஸ் சிறந்த அறிமுக வீரர் விருதுக்கும் தேர்வாகி இருந்தார்கள். அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.