புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் இன்று நெடுவாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். அதன்படி இன்று நெடுவாசல் பஸ் நிறுத்தம் அருகே வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவன் நான் தான். மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும் முதலில் குரல் கொடுத்தது நான்தான். அதன்பிறகு நம்மாழ்வார் குரல் கொடுத்தார். இது போன்ற போராட்டங்களில் கட்சி பெயர்களையோ, கொடிகளையோ பயன்படுத்தக் கூடாது என்று கூறியதும் நான்தான்.
இதற்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை நான் நடத்திய போது மாணவர்கள், இளைஞர்கள் வரவில்லை. இப்போது நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கு பெறுவது மகிழ்ச்சியை தருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நான் போராடிய போது வேகவேகமாக 5 கட்சிகள் வந்தன. அதன்பிறகு அமைதியாகிவிட்டனர். நான் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாதிட்டேன். 7 மணி நேரம் தொடர்ந்து வாதாடினேன்.
அப்போது நீதிபதி 40 லட்சம் பேர் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறீர்களே. ஆனால் 20ஆயிரம் பேர்தானே கைதாகி இருக்கிறார்கள் என என்னிடம் கேட்டார். அதற்கு நான் 30 கோடி மக்கள் சுதந்திரத்திற்காக 30 ஆயிரம் பேர்தானே போராடி கைதானார்கள் என்று கூறினேன்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்னுடைய நாணயத்தையோ, நேர்மையையோ யாரும் சந்தேகப்பட தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலை வெளிமாநிலத்தில் அமைக்கப்பட்ட போது ஆயுதம் ஏந்தி போராடிய பொதுமக்கள் 300 கோடி மதிப்பிலான அலுவலகத்தை உடைத்தெறிந்தனர். அதே போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒழிக்க ஆயுதத்தோடு போராடவும் தயாராக வேண்டும். அதில் முதல் ஆளாக நான் ஆயுதத்தோடு வந்து உடைப்பேன். நான் இவ்வாறு பேசுவதால் , மாணவர்களையும், இளைஞர்களையும் வைகோ தூண்டி விடுகிறார் என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை உள்பட பல்வேறு தலைவர்கள் கூறுவார்கள். தமிழிசை போன்ற பா.ஜனதா தலைவர்கள் பேசுவது எல்லாம் உளலறாக இருக்கின்றன.
நில ஆக்கிரமிப்பு திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு தான். அதனை பா.ஜனதா அரசு செயல்படுத்துகிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்தான். ஆய்வு செய்ய அனுமதி அளித்தது ஜெயலலிதா ஆட்சியில்தான்.
இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது பல ஆயிரம் அடிக்கு துளையிடும் போது பூகம்பம் ஏற்படுவது போன்ற பாதிப்பு ஏற்படும். அதில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பாதிப்பு ஏற்படும். இந்த திட்டத்தால் கேன்சர் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
நைஜிரியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தியதால்தான் நிலங்கள் அனைத்தும் அழிந்து வெளிநாடுகளுக்கு பிழைப்பு தேடி செல்கின்றனர். 31 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. எந்த இடத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.