இலங்கை அரசாங்கம் நேர்மையற்ற முறையில் நடக்குமானால், ஐநா பாதுகாப்பு மன்றம் ஓராண்டுக்குள் இலங்கையின் நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவில் உரையாற்றிய சில மணிநேரங்களில் பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் தொடர்ந்து நேர்மையற்ற முறையில் நடக்குமானால், பன்னாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுனர்களின் பங்கேற்புடன் கலப்புப் போர்க்குற்ற நீதிமன்றம் அமைத்தல் உள்ளிட்ட ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்தை எழுத்திலும் கருத்திலும் செயலாக்குவதற்கு முகாமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறுமானால், ஐநா பாதுகாப்பு மன்றம் ஓராண்டுக்குள் இலங்கை நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என விரிவாக கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபை இலங்கைக்கு வழங்கியிருந்த கடந்த பதினெட்டு மாதகாலத்தில், இலங்கை அரசாங்கத்தின் நடைப்பாடுகளை கண்காணிக்கவென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இப்பன்னாட்டுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, முப்பத்திர இரண்டு பக்கங்களை கொண்ட அறிக்கை, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கடந்த பன்னிரண்டு மாதக் கால நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதன் அடிப்படையில், பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு பின்வரும் முடிவுகளுக்கு வந்துள்ளது.
(1) இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்தின் படியான தன் உறுதிகள் தொடர்பாக இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லை
(2) மனித உரிமை மீறல்களும், பன்னாட்டுச் சட்டப்படிக் குற்றங்களான முறைகேடுகளும் இலங்கையில் தண்டிக்கப்படும் அச்சமின்றித் தொடர்ந்து நிகழ்கின்றன்
(3) நாட்டின் நீதித் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் முகாமையான சீர்திருத்தங்கள் மெய்ப்படவில்லை;
(4) இலங்கை அரசாங்கமே அமைத்த நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாய்வுச் செயலணியின் (ஊவுகு) இறுதி அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கத்தின் ஆரம்ப எதிர்வினையே இலங்கைக் குடிமக்கள் எடுத்துரைத்த விருப்பங்களை அலட்சியமாகவும் கண்மூடித்தனமாகவும் மறுதலிப்பதாக உள்ளது.
இதேவேளை, கலந்தாய்வுச் செயலணி தந்து 500 பக்க அறிக்கையில் மீறல்களை விசாரிப்பதற்கான நீதிப் பொறிமுறையில் பன்னாட்டுப் பங்கேற்புக்கு ஆலோசனை கூறியுள்ளது.
மேலே எடுத்துரைத்தவாறு சிறிலங்கா அரசாங்கத்தின் நடப்பு நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு தனது முதல் கள
அறிக்கையில் தெரிவித்த பல்வேறு பரிந்துரைகளையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. குறிப்பாக, பன்னாட்டு நீதிபதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்,
இணைப் பன்னாட்டு வழக்குத் தொடுனர் வேண்டும், சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு வேண்டும், பாதிப்புற்றோரின் பங்கேற்பும் தற்சார்பான கண்காணிப்பும் வேண்டும் என்ற பரிந்துரைகளை
எடுத்துக்காட்ட விரும்புகிறது.
இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ள கலந்தாய்வுச் செயலணியை பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு பாராட்டுகிறது (அதிலடங்கிய எல்லாப் பரிந்துரைகளையும்
ஒப்புக் கொள்ளாமலே).
ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்தின் படி தன் உறுதிகளையும், பாதிப்புற்றுக்கான கடப்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றத் தவறியதைக் கண்டித்துப் புதிய தீர்மானம் இயற்றும்படி பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு ஐநா மனித உரிமை மன்றத்தைக் கேட்டுக்கொள்கிறது.
ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்துக்கு இணங்க சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்வதை அவ்வப்போது முறையாக மீளாய்வு செய்யும் வகையில் ஐநா மனித உரிமை
மன்றம் தனக்குள்ள கட்டளையை நீட்டிக் கொள்ளுமாறு பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.
ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்தின் எழுத்தையும் கருத்தையும் முழுமையாகச் செயலாக்க சிறிலங்கா அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அரச தந்திர அழுத்தம் காக்க ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரையும், ஐநா மனித உரிமை மன்றத்தையும், பிற பன்னாட்டுப் செயற் பொறுப்பாளர்களையும் பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.
பிரித்தானியாவும், அமெரிக்காவும், இந்தியாவும், வசதி வாய்ப்பும் செல்வாக்கும் படைத்த பிற தொடர்புள்ள அரசாங்கங்களும் வெறும் வாய்வீச்சு அழுத்தம் என்பதைக் கைவிட்டு, பாதிப்புற்றோருக்கான சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கிணங்க சிறிலங்கா அரசாங்கம் செயல்படச் செய்வதற்கு அவசியமான நெம்புதிறனைப் பயன்படுத்துமாறு பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.
ஐநாமனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்தை இனியாவது இதய சுத்தியுடன் செயலாக்க முற்படுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக் கூறல் கண்காணிப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.
கலந்தாய்வுச் செயலணியின் இறுதி அறிக்கையை நீதிக்கான ஒத்திசைந்த முழுநிறைவான வழித்தடமாக ஏற்கும்படியும், அதிலடங்கிய பல்வேறு பரிந்துரைகளையும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் கருதிப் பார்க்க முற்படும்படியும் பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது.
பன்னாட்டு நீதிபதிகளும் வழக்குத் தொடுனர்களும் பங்கேற்கும் கலப்புப் போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைப்பதற்கான பொருள்பொதிந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி பொறுப்புக் கூறல் கண்காணிப்புக் குழு சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது.
பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழுவின் இறுதிப் பரிந்துரை:
*சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து நேர்மையற்ற முறையில் நடக்குமானால், பன்னாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுனர்களின் பங்கேற்புடன் கலப்புப் போர்க்குற்ற நீதிமன்றம் அமைத்தல் உள்ளிட்ட ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்தை எழுத்திலும் கருத்திலும் செயலாக்குவதற்கு முகாமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறுமானால், ஐநா பாதுகாப்பு மன்றம் ஓராண்டுக்குள் சிறிலங்கா நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.