போர் முற்றுப்புள்ளி இல்லை! ஈழத்திலிருந்து மற்றுமொரு ஆவணம்!!

மே 2009, இனப்போரும் படுகொலைகளும் எங்கேயோ தூர தேசத்தில் நிகழ்ந்து வருவதைப் பற்றி மட்டுமே செய்தியாகப் படித்த வந்த தமிழக மக்களுக்கு தங்கள் அருகிலேயே ஈழத்தில் அப்பாவிப் பொதுமக்கள் உடைமையும் உயிரும் துண்டாடப்பட்டு உரிமைக்கான போர் முடிவுக்கு வந்த மாதம்,

அங்கே இலங்கையில் மக்கள் சிந்திய ரத்தம் கடல்வழியே தமிழகக் கரைகளை அடைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை இந்த இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்க செய்தது.

போருக்கு பிறகு சூறையாடப்பட்ட அந்த மக்களின் நிலங்களை திருப்பித் தருவதாக அரசு அறிவித்தது ஆனால் இராணுவ ஆக்கிரமிப்புகள் இன்றளவும் அந்த பகுதியில் தொடர்ந்தபடிதான் இருக்கிறது.

மேலும் சிங்கள மக்களின் குடியேற்றமும் ரகசியமாக அந்த பகுதிகளில் நடந்தேறி வருவதாகக் கூறப்படுகிறது.

போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்ட சூழலில் தனக்கான நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் மக்கள் இருப்பதை “முற்றுப்புள்ளியா?” என்கிற தனது கதையின் மூலம் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஷெரின்.

கதை போருக்குப் பிறகான மக்களது மனநிலையை படமாக்கியுள்ளது. போரின் முடிவை பல்வேறு தரப்பினரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் தொடங்குகிறது கதை.

போர் முடிந்தது என்று அறிவிப்பு வந்த நாளன்று, ஒரு பக்கம் பட்டாசுச் சத்தம் கேட்கிறது மறுபக்கம் கண்ணீர் விசும்பல்கள்.அது வரை போர் பற்றி மௌனத்துடன் இருந்த உலக நாடுகள் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன.

ஏதேதோ திசைகளில் பிரிந்து செல்கிறார்கள் நெருக்கமானவர்கள். பாதுகாப்பான பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்தவர்கள் பாதுகாப்பற்ற பகுதிகளில் இருக்கும் தங்கள் உறவுகள் எப்படி இருப்பார்கள், இருக்கிறார்களா? என்கிற பல கேள்விகளுடனே வாழ்வினை கழிக்கிறார்கள்.

சுந்தரி (எ) ஆதிரை அப்படியான பாத்திரம்தான். தன் இரண்டு பிள்ளைகள், வயிற்றில் ஒரு பிள்ளையென்று போருக்கு பாதுகாவலாக கணவனை விட்டுவிட்டு வன்னியிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்லுகிறாள்.

போரில் இறந்தவர்களின் உடல் மருத்துவமனை எங்கும் கிடக்க, அதற்கிடையேவே குழந்தையும் பிறக்கிறது. போர் முடிந்தது என்கிற அறிவிப்பும் வருகிறது. ஆனால் அதற்குப் பிறகுதான் அவளது தனிப்போர் தொடங்குகிறது.

போர் முடிந்தாலும் கணவனைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத சூழலில் வெள்ளைத்தாள் போல அவளது வாழ்க்கையை எவ்வித ஊன்றுகோலும் இல்லாமல் மீண்டும் தொடங்குகிறது, சமூகம் பிள்ளைகளின் கேள்விகள் என அனைத்தையும் கடந்து அவள் வாழ்க்கையை எப்படிச் சந்திக்கிறாள் என்பதை படம் காண்பிக்கிறது.

இப்படியான பெண்களைச் சந்திப்பது இயல்புதான் என்றாலும் போர்ச் சூழலில் இது போன்ற பெண்கள் உண்மையாகவே வாழ்கிறார்கள், இது அவர்களது உண்மைக் கதை என்பதுதான் இதில் இருக்கும் கூடுதல் வலிமை.

ஆதிரை போன்று வெவ்வேறு சூழலில் வேறு வேறான கதாப்பாத்திரங்கள் திரை முழுக்க வருகிறது, தன் நிலங்கள் மொத்தத்தையும் இராணுவத்திடம் இழக்கும் ஒருவன், தன் தாயுடன் தனியே காடுகளில் வாழும் சிறுமி என விரவிக்கிடக்கிறார்கள் கதையெங்கும்.

சினிமாவின் சட்டதிட்டங்கள் எதற்கும் உட்படாமல் மிகைப்படுத்தலின்றி இயல்பாக வலியை வலியாகவே பதிவு செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ஷெரின் சேவியர்.

செய்தி ஊடகங்களால் மக்களிடம் வெளியே தெரியும் காயங்களைத்தான் காட்டமுடிந்தது. அவர்கள் இன்றளவும் சந்தித்து வரும் வலிகள் வேறானது. அதைதான் உண்மைச் சம்பவத்தை சொல்லும் தனது கதை வழியாக பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார் ஷெரின்.

எனக்கு சினிமா வேண்டும் என்று செல்பவர்களுக்கு படம் நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும் ஆனால் உரிமைப்போர் பற்றிய நீட்சியான ஆவணங்களில் நிச்சயம் ’முற்றுப்புள்ளியா?’ திரைப்படத்தின் பங்கும் இருக்கும்.