ரஜினியை சந்தித்தது இறைவன் எனக்கு தந்த ஆஸ்கர்: விக்னேஷ் சிவன்

போடா போடி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், அடுத்ததாக இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் அனைவரும் அறியப்படும் இயக்குனர்களில் ஒருவரானார். அந்த படத்தின்போது நயன்தாராவும், இவரும் காதலிப்பதாக வெளிவந்த செய்தி, இவரது பெயரை பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க செய்தது.

தற்போது விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன், சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பு நடத்திவரும் நிலையில், அருகில் நடந்த ‘2.ஓ’ படப்பிடிப்பில் இருந்த ரஜினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே நடந்ததாக கூறப்படுகிறது. ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன், அவரை சந்தித்தது இறைவன் எனக்கு தந்த ஆஸ்கர் விருது என்று குறிப்பிட்டுள்ளார்.