நம்முடைய உடல் உறுப்புக்கள் மற்றும் ஒவ்வொரு செல்லும் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்பட, சரிவிகித ஊட்டச்சத்து அவசியம். இந்தச் சமநிலை பாதிக்கும்போது, நோய்கள், தொற்றுகள், சோர்வு, செயல்திறன் குறைவு போன்றவை ஏற்படுகின்றன.
இந்தியாவில் சர்க்கரை நோய், இதய நோய்கள், உடல் பருமன் அதிகரித்திருப்பதற்கு, சரிவிகித ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்ளாததுதான் முக்கியக் காரணம். மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கொழுப்பு என நான்கு கூட்டணிகளின் கலவையே சமச்சீரான உணவு. கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் ஆகியவை உடலுக்கு ஆற்றலைத் தருகின்றன.
ஆனால், நார்ச்சத்தானது செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இந்த நான்கிலும் வைட்டமின், மினரல்கள் உள்ளன. இந்தச் சமச்சீரான உணவுக்கு மாறுவதன் மூலம், தேவையான ஊட்டச்சத்துக்களை முழுமையாகப் பெறலாம்.
காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.
9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.
மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள், ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.
மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.
மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.
இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்.
சரிவிகித உணவுகள் :
காய்கள் மற்றும் கனிகள்: காய்கறி, பழங்களில் புரதம் குறைவாக இருக்கும். வெங்காயம், கேரட், முள்ளங்கி, அவரை, தக்காளி. கீரைகளில் சிறுகீரை, அரைக்கீரை, பழங்களில் கொய்யா, திராட்சை, மாதுளை, வாழை. இதில், அனைத்து விதமான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.
தானியங்கள்: கேழ்வரகு, கோதுமை, தினை, கம்பு, வரகு, குதிரைவாலி, சோளம்.
பால் பொருட்கள் மற்றும் அசைவம் : பால், தயிர், மோர், முட்டை, மீன், இறால், நண்டு, சிக்கன்.
பயறு பருப்பு வகைகள்: சோயா, ராஜ்மா, மூக்கடலை, உளுந்து, துவரை, மொச்சை, கொள்ளு.
கொழுப்பும் சர்க்கரையும்: சமையல் எண்ணெய்கள், பாதாம், வால்நட், நெய், தேங்காய், வெல்லம், சர்க்கரை, தேன் இதில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளது.