என்னைவிட சுமித் சிறந்த வீரராக திகழ்வார்: பாண்டிங்!

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் சுமித்தின் பங்களிப்பு இதில் முக்கியத்துவம் பெற்று இருந்தது.

அவர் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தார். மிகவும் மோசமான ஆடுகளத்தில் சதம் அடித்ததன் மூலம் சுமித் தன்னை சிறந்த பேட்ஸ்மேன் என்பதை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அவர் 933 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் சுமித் என்னைவிட சிறந்த வீரராக திகழ்வார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஜொலித்தவருமான ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சுமித் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதே நிலையில் இன்னும் 100 டெஸ்ட் விளையாடினால் அவர் என்னைவிட சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வார். பிராட்மேனை ஒப்பிடும் அளவுக்கு வர முடியும். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன் பதவியிலும் அவரது செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது.

புனே டெஸ்டில் மிகவும் கடினமான நிலையில் அவர் அபாரமாக பேட்டிங் செய்தார்.

இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.

பாண்டிங் டெஸ்ட் (13,378 ரன்), ஒருநாள் போட்டியில் (13,589 ரன்) அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஆவார்.

77 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 48-ல் வெற்றி பெற்று கொடுத்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்று கொடுத்த சாதனை கேப்டன் பாண்டிங் ஆவார்.