தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 138 பந்துகளில் 11 சிக்சருடன் 180 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.
ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்காது என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஹெஸ்சன் கூறும் போது ‘கப்தில் டெஸ்ட் அணியில் இடம் பெறமாட்டார். அவர் தற்சமயம் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்ததால், அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம்.
ஆனால் உலகத்தரம் வாய்ந்த வீரர்களில் பலர் ஒரு வடிவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, இன்னொரு வடிவிலான போட்டியில் தடுமாறியதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு’ என்றார். கடைசி 10 டெஸ்ட் இன்னிங்சில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.